Wednesday 20 April 2011

மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் பார்வையற்ற 10 வயது சிறுமி



கண் பார்வையிழந்த நான்கு மொழிகளில் தேர்ச்சியுள்ள 10 வயது சிறுமியொருத்தி ஐரோப்பாவின் நாடாளுமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றுகின்றாள். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் மிக இளமையான மொழிபெயர்ப்பாளர் என்ற பெருமையை இந்த சிறுமி பெற்றுள்ளாள்.

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் நகரை சேர்ந்த அலெக்ஸா ஸ்லோனி என்ற மேற்படி சிறுமி இரண்டு வயதில் தனது கண்பார்வையை இழந்தாள். அவள் விடுமுறைக்காக பிரான்ஸ் சென்ற போது மூளையில் கழலை ஏற்பட்டதைத் தொடர்ந்து அவளின் பார்வை பறிபோனது.

ஆனால், அவள் தனது பலவீனத்தை புறந்தள்ளி மொழிகளை சிறப்பாக கற்றுக்கொண்டாள். 10 வயதான அவள் ஏற்கெனவே ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ், மற்றும் மன்டரின் (சீன மொழி) ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றவளாக காணப்படுகிறாள். தற்போது அவள் ஜேர்மன் மொழியை கற்று வருகின்றாள்.

மொழிப்பெயர்ப்பாளராக கடமையாற்ற வேண்டுமென்ற அவளின் கனவு தற்போது நனவாகியுள்ளது. கிழக்கு இங்கிலாந்தின் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஸ்டடி மொழி பெயர்ப்பாளராக அலெக்ஸாவை ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு அழைத்துள்ளார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு 14 வயதிலேயே மொழிப்பெயர்ப்பாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், அலெக்ஸா 10 வயதிலே உள்வாங்கப்பட்டுள்ளார். அது உண்மையில் வியப்பிற்குரியது என அலெக்ஸாவின் தாய் இஸபெல்லா தெரிவித்துள்ளார்.

அலெக்ஸா கலப்பு திருமணத்தினூடாக பிறந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது. அவளது தாய் இஸபெல்லா அரைவாசி பிரெஞ்சு, ஸ்பானிய கலப்பு கொண்ட பெற்றோருக்குப் பிறந்தவர். அலெக்ஸாவின் தந்தை ரிச்சர்ட் ஆங்கிலமொழி பேசுபவர்.

4 மொழிகளை தேர்ச்சியுள்ள அலெக்ஸா 6 வயதிலிருந்தே மொழிபெயர்ப்பாளராக கடமையாற்ற வேண்மென்ற லட்சியத்தைக் கொண்டுள்ளார் என இஸபெல்லா தெரிவித்துள்ளார்.

தொடுதிரை, சவுண்ட் சிஸ்டத்துடன் நவீன மலசலக்கூடம்

Touch-screen உட்பொருத்தப்பட்ட ஒலியமைப்பு, சூடான இருக்கை உட்பட ஆடம்பர வசதிகளைக் கொண்ட நவீன மலசலக்கூடமொன்றை அமெரிக்க நிறுவனமொன்று உருவாக்கியுள்ளது.

இதன் விலை 6390 அமெரிக்க டொலர்களாகும். (சுமார் 7 லட்சம் இலங்கை ரூபா).

நியூமி என அழைக்கப்படும் இந்த மலசலக்கூடத்தை கொஹ்லர் எனும் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த மலசலக்கூடம் தொடுதிரை வசதி, நறுமணமூட்டி, முதலியவற்றைக் கொண்டுள்ளது. மிகச் சிறந்த மலசலக் கூட அனுபவத்தை இது கொடுக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதுமையான இரட்டை பிளெஷிங் தொழில்நுட்பம், மற்றும் தானாக திறந்து மூடும் மூடி ஆகியவற்றையும் இது கொண்டுள்ளது. இந்த வகையிலான மலசலக்கூடம் நியூ மட்டுமே என கொஹ்லர் நிறுவனத்தின் உபதலைவர் ஜிம் லூயிஸ் தெரிவித்துள்ளார்.