Tuesday 25 October 2011

நிதி நெருக்கடி காரணமாக விக்கிலீக்ஸ் வீழ்ந்தது


கடும் நிதி நெருக்கடியில் நிலையால் இனி எவ்வித ஆவணங்களையும் வெளியிடப் போவதில்லை என விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர் பற்றிய பல்வேறு இரகசிய ஆவணங்களை லட்சக்கணக்கில் வெளியிட்டதன் மூலம் உலகின் கவனத்தைக் கவர்ந்தது விக்கிலீக்ஸ்.
இதன் தொடர்ச்சியாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தற்போது அவர் லண்டனில் பிணையில் உள்ளார்.
இந்நிலையில் விக்கிலீக்சுக்கான நிதி திரட்டும் வழிகளை, அமெரிக்கா அடைத்து விட்டது. விசா, மாஸ்டர் கார்ட், வெஸ்டர்ன் யூனியன் மற்றும் பே பேல் போன்ற நிதி நிறுவனங்கள் விக்கிலீக்சுக்கான நிதி திரட்டும் வேலையை நிறுத்தி விட்டன. இதுகுறித்து, நேற்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட அறிக்கையில், கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இனிமேல் ஆவணங்கள் வெளியிடுவது நிறுத்தப்படும். நிதி திரட்டும் பணி முழு வீச்சில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sunday 23 October 2011

துர்நாற்றம் அடிக்கும் கடாபியின் சடலம்: மக்கள் மூக்கைப் பொத்தும் நிலை !

கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் தலைவர் கேணல் கடாபியின் உடல் அவரின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று லிபியாவில் தற்போது நிர்வாகம் செய்யும் இடைக்கால குழு தெரிவித்துள்ளது. கடாபியின் உடல் ஏற்கனவே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவரின் உடல் சனிக்கிழமை மாலையோ அல்லது ஞாயிற்றுக் கிழமையோ உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் இடைக்கால அரசு தெரிவித்துள்ளது.

அதே நேரம் வியாழக்கிழமை கடாபி கொல்லப்பட்டதற்கு தான் முழு பொறுப்பேற்றுக் கொள்வதாக லிபிய இடைக்கால அரசின் இராணுவக் கமாண்டர் ஒமரன் இல் ஒவேப் பி.பி.சியிடம் தெரிவித்தார். மிஸ்ரட்டா நகரிலுள்ள இறைச்சி சேமித்து வைக்கப்படும் இடமொன்றில், கிடத்தி வைக்கப்பட்டுள்ள கடாபியின் சடலம் உருக்குலையத் தொடங்கியுள்ளது. சடலத்தைப் பார்க்க அலை மோதுகின்ற மக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கைப் பொத்தியபடி, சென்றுவருவதை காணக்கூடியதாக இருக்கிறது.

கடாபியின் சடலத்துக்கு என்ன நடக்கவேண்டும் என்பது பற்றி வெவ்வேறு தரப்பினரிடையே வெவ்வேறு கருத்துக்கள் நிலவியதாக பி.பி.சி செய்தியாளர் கூறினார். அவரின் உடலை தகுந்த குளிரூட்டும் அறையில் வைக்காமல் விட்டதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது