Saturday, 1 October 2011

நேர்மையின் மதிப்பு ரூ.2000: ரயிலில் கிடந்த ரூ.10லட்சத்தை ஒப்படைத்த பணியாளர்

போபால், செப்.27: ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.

எத்தனையோ இந்தியர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ்.
இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் ‘நேர்மையான’ இந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு, போர்வைகளை ‘இலவச’ பொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு. அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான் தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் ’வெட்டு’ விழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை.
கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்‌ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப் பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாக அந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர் அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.
ஊழல் செய்திகள் பத்திரிகைகளில் ஒரு சிறு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்திருக்கும் இந்நாளில், பகவான் தாஸ் போன்றவர்களின் நேர்மை சின்னஞ்சிறு இடத்தையும் ஆக்கிரமிக்காதது ஆச்சரியம்தான். மக்களின் மனங்களில் இவர் போன்றவர்களின் நேர்மை ஆக்கிரமிக்குமானால் நிச்சயம் பத்திரிகைகளில் பத்திகளிலும் இடம்பெறுமோ என்னவோ?
தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும்.
‘’எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன். உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்…”
பகவான் தாஸ் சொன்னது போல் செய்தார். அவருக்குப் பரிசாக ஜபல்பூர் பகுதி உயரதிகாரியிடம் இருந்து அவருக்குப் பரிசாக ரூ.2000 கிடைத்தது. இருப்பினும், உயரதிகாரிகள் பகவான் தாஸின் செயலுக்கு தகுந்த பரிசு அளிக்கும்படி ரயில்வேத் துறைக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக் கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாது” என்கிறார்.
அண்ணா ஹஸாரே உண்ணாவிரதம் இருந்த நேரத்தில், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக ராம் லீலா மைதானத்தை நோக்கி இவரும் சென்றார். ஆனால், அங்கே திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு மத்தியில் இவரால் அண்ணா ஹஸாரேவின் அருகில்கூட செல்ல முடியவில்லை. கூட்டத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட பகவான் தாஸ், அப்படியே திரும்பினார். ஆனாலும் அவர் மனத்தில் கொஞ்சமும் வருத்தம் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் அழுக்கடைந்த பிளாட்பாரங்களில், அழுக்கடைந்த மனிதர்களுக்கு மத்தியில் நேர்மையோடு தூய்மையாக செயல்படும் பகவான் தாஸ் போன்றவர்களின் வாழ்க்கைச் செய்தி, ஆயிரம் அண்ணா ஹசாரேக்களின் உண்ணாவிரதச் செய்தியை விட மேலானதன்றோ?!