Wednesday, 27 April 2011

23 வருடங்களாக மூளையில் இருந்த குண்டு எடுக்கப்பட்டது

சீனாவை சேர்ந்தவர் வாங்தியாங்கிங்(40). இவர் ஒரு விவசாயி. கடந்த 1988ம் ஆண்டு வடக்கு சீனாவில் ஹெபி மாகாணத்தில் உள்ள ஷான்ஜியா கோயின் நகரில் தங்கியிருந்தார். ஒருநாள் அவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது தலையில் ஏதோ ஒன்று தாக்கியது போல் உணர்ந்தார். இதைத் தொடர்ந்து அவர் மயக்கம் அடைந்தார். மயக்கம் தெளிய அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் பழைய நிலைக்கு திரும்பினார்.

அதைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி தலைசுற்றலும், மயக்கமும் ஏற்பட்டது. அது போன்று 23 வருடங்கள் ஓடிவிட்டது. இந்நிலையில் அவர் கடுமையான தலைவலியால் அவதிப்பட்டார். எனவே அவர் நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சைக்கு சென்றார். அங்கு அவரது தலைப்பகுதி ஸ்கேன் செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவரது மூளையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த துப்பாக்கி குண்டு ஓபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அந்த குண்டு சுமார் 2 செ.மீ நீளம் இருந்தது. தற்போது வாங்தியாங்கிங் நலமுடன் உள்ளார். அவரது தலையில் இந்த குண்டு எப்படி பாய்ந்தது? யார் துப்பாக்கியால் சுட்டார்கள்? என அவருக்கு தெரியவில்லை.

ஆனால் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற போது கல் தன்னை தாக்கியது போன்று இருந்ததாக அவர் தெரிவித்தார். அந்த இடத்தின் அருகேயுள்ள ஒரு மலையில் ஒரு நபர் நின்று கொண்டிருந்தார். அவன் தான் தன்னை துப்பாக்கியால் சுட்டு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment