ான் கேப்ரியல் : சீனாவைச் சேர்ந்த கர்ப்பிணிகள், சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு சென்று குழந்தை பெற்றுக் கொண்டு நாடு திரும்பி விடுவதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, இதற்கு உடந்தையாக இருந்த குடியிருப்பு பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க குடியுரிமை பெற விரும்புவோர் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம் சான் கேப்ரியல் நகரம் வெளிநாட்டினருக்கான பிரசவ மையமாக விளங்குகிறது. குறிப்பாக மெக்சிகோ, தென்கொரியா, சீனாவைச் சேர்ந்த கர்ப்பிணிகள் பலர் இங்கு வந்து குழந்தை பெற்றுச் செல்வதாக புகார் எழுந்துள்ளது. இவர்களுக்கான போக்குவரத்து மற்றும் தங்கும் ஏற்பாடுகளை அதற்கென உள்ள சுற்றுலா நிறுவனங்கள் செய்து தருவதாகவும், கேப்ரியல் நகரில் குறுகலாக உள்ள பல தெருக்களில் உள்ள வீடுகளில் இவர்கள் தங்க வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
சொகுசு வசதியுடன் கூடிய அடுக்குமாடிக் குடியிருப்புகளும் வெளிநாட்டு கர்ப்பிணிகள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல், நியூயார்க் நகரில் உள்ள துருக்கியைச் சேர்ந்த மர்மரா என்ற ஓட்டல், மாதக் கணக்கில் குழந்தையுடன் தங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த அமெரிக்க போலீஸ் அதிகாரிகள், அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, குடியிருப்புகளில் கர்ப்பிணிகளும், பச்சிளங்குழந்தைகளுடன் தாய்மார்களும் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த குடியிருப்புகளை சீல் வைத்ததுடன், அங்கிருந்தவர்களை அருகில் உள்ள விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
ÔÔவெளிநாட்டு கர்ப்பிணிகளும், குழந்தையை பெற்றெடுத்த பெண்களும் சுற்றுலா விசாவில் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சில மாதங்கள் தங்கியிருக்கும் இவர்கள், குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டு நாடு திரும்பி விடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது. தங்கள் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக அவர்கள் தெரிவித்தனர்ÕÕ என காவல் துறை ஆய்வாளர் கிளேடன் ஆண்டர்சன் தெரிவித்தார்.
வெளிநாட்டினர் உட்பட அமெரிக்காவில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் அமெரிக்க குடியுரிமை வழங்க அந்நாட்டு அரசியல் சட்டத்தின் 14வது திருத்தம் வகை செய்கிறது.
இதன் அடிப்படையில், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள், குழந்தைக்கு 21 வயது பூர்த்தியாகும்போது, பெற்றோரும் குடியுரிமை கோரி விண்ணப்பிக்கலாம்.
இந்த சட்ட திருத்தத்தை பெரும்பாலான வெளிநாட்டினர் தவறாக பயன்படுத்துவதாகவும், இதை வாபஸ் பெற வேண்டும் எனவும் கடந்த ஆண்டு கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், இதை உறுதிப்படுத்துவதாக இந்த சம்பவம் உள்ளது. இதுபோன்ற செயல் எவ்வளவு காலமாக நடைபெறுகிறது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments:
Post a Comment