இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள விரும்பும் சீனா, இலங்கைக்கான உதவிகளை 2005 ஆம் ஆண்டிலிருந்து சடுதியாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில ஆய்வாளர்கள் மற்றும் அவதானிப்பாளர்களின் கருத்தின்படி, சீனா தனது முத்து மாலை கடல் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக இந்து சமுத்திரத்தின் வடபிராந்திய துறைமுக அணுகலை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடனான செல்வாக்கை நாடுவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிராந்தியத்தில் துறைமுகங்களை அமைக்கும் சீனாவின் முயற்சி குறித்து இந்திய பாதுகாப்பு திட்டமிடலாளர்கள் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிவதாகவும் இலங்கை தொடர்பான 8 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கு கரையோரத்தில் ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்காக குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளதகா தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் கவாடர், பங்களாதேஷின் சிட்டகொங், பர்மாவின் சிட்டாவே ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கு சீனா உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் எல்.ரி.ரி.ஈ.யை தோற்கடிப்பதற்கான அவர்களின் (இலங்கை அரசாங்கத்தின்) யுத்தத்தின்போது போர் நிறுத்தத்தை ஏற்படுத்துமாறு மேற்கு நாடுகள் கோரியமை குறித்து கொழும்பு அரசாங்கமும் கவலையடைந்திருந்ததாக கூறப்படுகிறது
அதேவேளை, வன்முறையான இனத்துவ பிரிவினை இயக்கமொன்றுக்கு எதிரான மிருகத்தனமான யுத்த வெற்றிக்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதில் இலங்கை ஒரு சோதனைக் களமாக உள்ளது எனவும் அவ்வறிக்கை கூறியுள்ளது.
2009 ஆம் ஆண்டு எல்.ரி.ரி.ஈ இற்கு எதிராக இராணுவ வெற்றிக்கு தலைமை தாங்குவதில் சிங்கள பெரும்பான்மை மக்களின் அமோக ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டிருந்தார் எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புகளினதும் பல நாடுகளினதும் கோரிக்கையை வீட்டோ அந்தஸ்துள்ள இரு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பு சபை நிறைவேற்றும் வாய்ப்பு குறைவு எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரிக்குமாறு ஐ.சி.சியை (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்) விசாரிப்பதற்கு பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுக்க வேண்டியிருக்கலாம். வீட்டோ அதிகாரமுள்ள ரஷ்யாவும் சீனாவும் பாதுகாப்புச் சபை இவ்விடயத்தில் தலையிடுவதை எதிர்ப்பதற்கான அதிகாரத்தை கொண்டிருக்கின்றன என அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம். ஏனெனில் அது சிங்கள தேசியவாதிகளின் மத்தியில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் செல்வாக்கையே அதிகரிக்கச்செய்யும் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment